புறநானூறு கூறும் அரசனின் பண்புகள் பற்றிய விரிவான கட்டுரை
அறிமுகம்
மனிதன் நாடோடியாக அலைந்து குடிகளாக வாழ ஆரம்பித்தவுடன், அவன் உடைமைகளுக்குப் பாதுகாப்பு தர ஒரு தலைவன் தேவைப்பட்டான். அதுவே அரசியலின் முன்னுரைக்காலமாகும் . அரசியல் இயற்கையைப்போல் ஒவ்வொரு காலகட்டத்திலும் தான் ஆளும் முறைக்கான தேர்ந்தெடுப்பை நிகழ்த்துகிறது.
ஒரு காலத்தில் அதற்கு முடி சூடிய ஓர் அரசன் தேவைப்பட்டான். பிறகு இக்காலத்தில் அது மக்களாட்சியை விரும்புகிறது. ஒரே உடலின் இருவேறு உறுப்புகள் தங்களுக்குள் தாங்களே கட்டளையிட்டுக் கொண்டு ஓர் அழகிய ஓவியத்தை உருவாக்குகின்றன. அதுபோல், ஒரே நாட்டைச் சார்த்தோர் தங்களுக்குள் தாங்களே கோரிக்கையும் வைத்துக்கொண்டு, அதை நிராகரித்தும், நடைமுறைப்படுத்தியும் எய்தப்படும் அரசியல் ஓவியமாக இன்று மக்களாட்சி நம் கண் முன் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
அதற்கும் போதிய அளவில் அறிவுரைகளை முடியாட்சி காலத்தில் உருப்பெற்ற நமது சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு, என்னவெல்லாம் வழங்குகிறது என்பதைக் கூறுவதாக இந்தக் கட்டுரை அமைகிறது. இதன் தலையாய நோக்கமே மக்களை வழிநடத்தும் ஒரு மன்னனின் பண்புகளைப் புரிந்துகொள்வதாகவே அமைந்துள்ளது. அது இன்றளவும் நம்மை நாமே ஆண்டுகொண்டிருக்கும் போதும் பயன்படுகிறது என்பதுதான் நாம் அறிந்துகொள்ளவேண்டியுள்ளது.
புறநானூறும் அரசியலும்
புறநானூறு என்பது சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்று. கடவுள் வாழ்த்தோடு சேர்த்து மொத்தம் நானூறு பாடல்களைக் கொண்டதாக இருக்கும் இந்த புறநூலை ஏறத்தாழ 157 புலவர்கள் பாடியுள்ளனர். அதில் 18 பெண்பாற் புலவர்களும் அடக்கம். நான்கு முதல் நாற்பது வரையிலான அடியெல்லையைக் கொண்டது.
அக்கால முடியாட்சிக்குத் தேவையான கருத்துக்களை, யோசனைகளைக் கூறினார்கள். அரசர்களை ஆற்றுப்படுத்தியும் உள்ளனர். சங்க கால புலவர் பெருமக்கள் அவர்களுக்கு ஆலோசகர்களாகவும் இருந்துள்ளனர். அந்த ஆலோசனைகளை அரசர்கள் பரிசீலித்தும் உள்ளனர். மேலும், புறநானூறு வழிகாட்டும் அரசு நிர்வாகம் குறித்த ஆலோசனைகளும் இவர்கள் கூறியவைகளே .
“ சங்க காலத்தில் தமிழக ஆட்சி முடியாட்சி எனினும்
குடியாட்சி போன்ற சிறப்புடன் இருந்தது.” -ம.து. ச. – ப(19)
என்ற வரிகள் சங்க காலத்து அரசியல் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது. ஏனெனில், புலவர்கள் மக்களின் குறலாக இருந்தனர். அது இன்றும் மக்களாட்சி நடைபெறும் நாளிலும் உதவுகிறது என்பது தான் நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதை அவர்களின் பாடல்கள் வழியே ஒவ்வொரு யோசனைகளாக இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது.
அடக்கம்
உலக மனிதர்கள் யாவர்க்கும் போதிக்கப்படவேண்டிய அல்லது அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய மிக முக்கியமான விடயம் அடக்கம் தான். அடக்கம் என்பது சக மனிதனை, சக வெற்றியாளனைக் கடவுள் போல மதிக்கும்படி செய்யும் ஒரு வகைக் கருவியாகும். தோல்வியுற்றவன், தனது தோல்வியைப் பொருட்படுத்தாமல் ‘இவனுடன் தோல்வியுற்றது பெருமையே’ என யோசனை செய்ய வைப்பது, ஒரு வெற்றியாளனின் அடக்கமாகும். அரசியலில் இந்த அடக்கம் தவிர்க்க முடியாததாகப் பார்க்கப்படுகிறது.
“வெற்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய” - புறம். 6 (25)
என்ற புறநானூற்றின் வரிகள் மூலம் காரி கிழார் , பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்துகிறார். அவன் எத்தனை வெற்றிகள் பெற்றாலும் செருக்கடையாமல் இருக்கிறான் என்கிறார். புலவர்கள் சுட்டிக்காட்டி வாழ்த்துமளவு அடக்கம் ஒரு மன்னனுக்கோ அல்லது ஒரு நாட்டின் தலைவனுக்கோ மிக முக்கிய குணமாக விளங்குகிறது.
அடக்கம் பற்றிக் கூறுகையில் அந்த அடக்கம் எந்தத் தன்மை கொண்டது என்பதையும் நாம் அறிய வேண்டியுள்ளது. எல்லோருக்கும் நடத்தை ரீதியில் அடங்கிப் போவதல்ல அடக்கம். கற்கவேண்டிய எல்லாவற்றையும் கற்க வேண்டும். அறிய வேண்டிய எல்லாவற்றையும் அறியவேண்டும். எனினும் கற்ற கல்வியின் நெறியில் அடக்கமுள்ளவனாக இருந்தால்தான் அது அடக்கமாகும் என்கிறார் நம் தெய்வப்புலவர். இச்செய்தியை,
“செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்” - குறள் 123
என்ற இந்தக் குறட்பாவின் வழி நாம் உணரலாம்.
இன்றளவும் உலகப் புகழ் பெற்று தலை நிமிர்ந்து நிற்கின்றது தஞ்சை பெரிய கோவில். கோவிலைக் காட்டியது யாரெனக் கேட்பின் மாமன்னர் இராஜராஜன் என நாம் மார்தட்டிக் கூறிக்கொள்ளலாம். ஆனால், இராஜராஜசோழரோ அந்தப் புகழைத் தனதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. கோவில் கல்வெட்டு ஒன்றில்,
“நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்வரமுடையார்க்கு ”- கல்வெட்டு
என்று இடம்பெறும் பெரும் பகுதி ஒன்றுண்டு. அவர் இந்தக் கோவிலை, நான் எடுப்பித்தேன் எனக் கூறவில்லை. மாறாக ‘நாம்’ என்ற சொல் அழுத்தமாகக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். ‘நாம் அனைவரும் எடுப்பித்த கற்றளி’ என்று சொல்லி அவர் பெருமிதம் கொள்கிறார்.
சோழர் காலத்தை உச்சம் தொடவைத்த ஒரு மாமன்னர், ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யப் போகும் ஒரு மாபெரும் கற்றளியைக் கட்டிய பெருமையை, பெரும் புகழைத் தனதாக்கிக் கொள்ள விரும்பாமல் பொதுவுடைமையாக்கியது அவரின் அடக்கக் குணத்தின் வெளிப்பாடாகவே பார்க்கத் தோன்றுகிறது. அதுவே இன்றளவும் நம் அனைவரையும் அவரின் நாமத்தைப் பாட வைத்துள்ளது.
சொல் பிறழாமை
மாநிலமாகிய இந்த உலகமே தலைகீழாகப் புரண்டாலும் சொன்ன சொல்லைத் தவறாமல் காக்க வேண்டும் என்பதைப் புறநானூறு,
“ நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்” - புறம் 3(14)
என்ற இந்த வரிகள் மூலம் நமக்குத் தெரியப்படுத்துகிறது.
செயல் பிறழாமை
ஒருவனின் சொல் எந்த அளவிற்குத் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை நமது நீதி இலக்கியங்கள் கூறுகின்றன. சொல்லும் சொற்களில் ஏதேனும் சோர்விருந்தால், அதுவே நமது மற்ற குற்றங்கள் அனைத்தையும் காட்டிக்கொடுத்துவிடும் என்பதை,
“சொற்சோர் வுடைமையி னெச்சோர்வு மறிப ” - முதுமொழி(18)
என்ற இந்த முதுமொழிக்காஞ்சியின் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன. சொற்பிறழாமை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் செயல் பிறழாமையும். சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பதும், சொன்ன சொற்படி நடத்தல் ஆகிய இரண்டும் ஓர் ஆட்சியாளனுக்கு இன்றியமையா இரண்டு விடயங்களாக உள்ளன.
ஒரு நாட்டின் தலைவன் நகர்த்தும் ஒவ்வொரு சதுரங்கக் காய்களும், அந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. அவர்களின் இன்ப துன்பங்களை உறுதிப்படுத்துகிறது . எனவே ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் இலட்சம் முறை யோசிக்க வேண்டும். செயலைத் தொடங்கிவிட்டால் அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளைச் செய்பவன் தான் நல்ல ஆட்சியாளனாக இருக்க இயலும். செயலைத் தொடங்கிவிட்டு வருந்துவது கூடாது என்ற இச்செய்தியை,
“ செய்து இரங்காவினைச் சேண்விளங்கும் புகழ்” - புறம் 10(11)
என்ற புறநானூற்றின் வரிகள் நமக்கு உணர்த்தும். எனவே சொல்லும் செயலும் அரசர்களுக்குத் தேவைப்படும் திறமைகளாக உள்ளன.
நீதியே உயிர்
நமது நாட்டின் உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு செம்பிலான சிலை பாரத மாதாவான நமது இந்தியா, அதன் நாட்டு மக்களை அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் பாதுகாப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். அது போல மன்னன் தான் மக்களை அநீதியிலிருந்து காக்க வேண்டும்.
மக்களின் நம்பகத்தன்மையை சம்பாதித்துக்கொள்வது ஒரு நாட்டின் தலைவனுக்கு மிக எளிது. அவன் நீதி வழுவாத ஆட்சியைக் கொடுத்தாலே போதும். எத்தனை பெரிய மன்னர்களை வரலாறு பார்த்திருப்பினும், நீதிக்காகத் தன்னுடைய ஒரே மகனைக் கொன்ற மனுநீதிச் சோழனையே அது இன்றளவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
கன்று இழந்த பசு, அரண்மனை ஆராய்ச்சி மணியை ஒலிக்க, வந்து நின்றார் நீதித் தேவர்.தனது மகன் சென்ற தேரில் கன்று அடிபட்டு இறந்ததை அறிந்த அவர், சாலையில் தன் ஒரே மகனான வீதிவிடங்கனைப் படுக்கச்செய்து அவன்மேல் தேர் ஏற்றி, நிகழ்விடத்திலேயே அக்கணமே மரண தண்டனையை நிறைவேற்றினார் என்பதை சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் வழி நாம் அறியலாம். அதனுள்,
“ வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற்புதல்வனைஆழியின்மடித்தோன்” - சிலம்பு.வழக்கு.(52-54)
என வரும் வரிகளை நாம் சிலம்பில் காணலாம்.
கணவனை இழந்த கண்ணகி, நீதி கேட்டு பாண்டியனிடம் சென்று
தன்னைப் பற்றிக் கூறும் அறிமுக உரையிலேயே, தனது நாட்டில் நீதிக்குப் பெயர்போன மன்னவர்களைப் பற்றிக் கூறும்போது மனுநீதிச்சோழனைச் சுட்டிக்காட்டி, ‘ எமது நாட்டில் பசுவிற்கும் நீதி வழங்கிய பெருமான்கள் உண்டு. நீயோ ஆராய்ந்து பார்க்காமல் மனிதனையே கொன்று பாவம் இழைத்து விட்டாய்” எனக் கண்ணகி மறைமுகமாகப் பாண்டியனை சாடியதாக இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
பாண்டியனும் குறைவில்லாமல் தான் தவறான நீதி வழங்கியதை அறிந்ததும், ஒரு நொடி கூட உயிர்த்து இருக்கவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஒரு சிறந்த ஆட்சியாளன் நீதியைத் தனது உயிருக்கு நிகராகவும், முடிந்தால் உயிருக்கு மேலாகவும் மதிக்க வேண்டும் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம்.
அரசனே நாட்டின் தாய்
நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று பாதுகாப்பு. மக்களின் உயிர், உடைமைகளுக்குப் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒவ்வொரு ஆட்சியாளரின் அடிப்படைக் கடமையாகும். அவன் வெண்கொற்றக் குடையின்கீழ் எந்தக் குளிர்ச்சியை உணருகிறானோ அதே குளிர்ச்சி மக்களுக்கும் கிடைப்பதை அவன் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மனிதர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உணர்வு ஏற்படும் இடம் தாய் தான். ஒரு சில காவல் தெய்வங்களே பெண் தெய்வங்களாக இருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. மக்களைப் பேணிக் காக்கும் எண்ணம் கொண்ட ஒரு நல்ல அரசன், குழந்தையைக் காக்கும் தாய்போல் காக்க வேண்டும் எனக் கூறுகிறார் நரிவெரூஉத் தலையார் . இதனை,
“ அருளும் அன்பும் நீக்கி நீங்கா
குழவி கொள்பவரின் ஓம்புமதி !” - புறம்:5(5-7)
என வரும் இந்தப் பாடல் வழி நாம் கண்டுகொள்ளலாம்.
ஒரு மன்னன், தன் காக்கும் கடமையிலிருந்து மாறுபட்டால் என்னவாகும் என்பதைக் கலித்தொகையில் பெண்ணொருத்தி கூறுகிறாள். மன்னன் மக்களைக் காக்க மறந்தாலோ, பண்பற்றவர்கள் சொல் கேட்டு நிலைதவறி மக்களுக்குத் தீமை விளைவித்தாலோ அது கொடுங்கோன்மையாகிவிடும் என்கிறாள் அவள்.
“ நடுவிகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்கக்
என்ற வரிகள், கொடுங்கோன்மையோ அல்லது ஆட்சியாளரின் கடமை தவறுதலோ என்ன விளைவு ஏற்படுத்தும் என்பதை நமக்குக் கூறுகிறது. இதைப்போல் , காக்கவேண்டிய முறையில் அரசன் குடிமக்களைக் காக்கத் தவறினால், பசுவினால் நாட்டிற்கு வரும் பயன் குன்றிப்போகும். அதுமட்டுமில்லாமல், கல்வி கற்பது, வேள்வி செய்வது, செய்விப்பது, கொடுப்பது, வாங்குவது போன்ற ஆறுதொழில்கள் மற்றும் அதன் அறிவு இல்லாமல் போய்விடும் என்கிறார் வள்ளுவர். இதனை,
“ ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனில்” - குறள்.560
என்ற குறட்பாவின் வழி நாம் உணரலாம்.
முடிவுரை
இங்ஙனம் புறநானூறு என்னும் தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் நமது பழங்கால அரசர்களிடம் இருந்த அல்லது இருக்க வேண்டி பண்புகள் அனைத்தையும் எடுத்துரைக்கிறது. மணிமுடி கனமாக கனமாக அடக்கம் கூட வேண்டும். மக்களுக்குத் தாயாக இருந்து பாதுகாக்கக் கூடியவனின் சொல் மற்றும் செயல் பிறழாமல் இருக்கவும் அறிவுரைகள் கூறப்பட்டுள்ளது.மன்னன் உயர்ந்த பண்பாளனாக இருந்தால் குடிகளும் பண்பாளர்களாக இருப்பார்கள். ஏனெனில் , மன்னனே மக்களுக்கு முன்மாதிரி. இவை அனைத்தும் இக்காலத்திலும் பொருந்துவதாகவே இருக்கிறது.
மேற்கோள்கள்
1) அ. ப. பாலையன் – புறநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை- 14, 2018.
2) நாமக்கல் கவிஞர் – திருக்குறள் மூலமும் உரையும், சுதர்சன் பதிப்பகம்,
சென்னை – 600017.
3) கா. ர. கோவிந்தராஜ முதலியார், கா. இராமசாமி நாயுடு –
முதுமொழிக்காஞ்சி, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை – 600017, நவம்பர்
2010
4) புலியூர்க்கேசிகன் – கலித்தொகை, பாரி நிலையம் , சென்னை – 600001,
2005.
5) மது.ச.விமலானந்தம் – தமிழ் இலக்கிய வரலாறு, முல்லை நிலையம், 9,
பாரதி நகர் முதல் தெரு, தி .நகர், சென்னை – 17.
6) ஞா. மாணிக்கவாசகன், உமா பதிப்பகம், 171(18), பவளகாரத் தெரு,
மண்ணடி, சென்னை – 600001, 2016.
7) இரா. நாகசாமி – தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு
அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு, 1969.
8) https://en.wikipedia.org/wiki/Supreme_Court_of_India

.png)




