தினமும் நாம் காணும் சாதாரண நிகழ்விகளில் தடைபெறும் மாற்றங்கள் பற்றிய சிறுகதை
பேருந்து பிரயாணங்கள் எப்போதுமே சலிப்பை உண்டாக்காது. பள்ளி, கல்லூரிகள் செல்லும் போது பேருந்தில் ஏறியவுடன் ஜன்னலோர இருக்கையைத் தேடாதவர் இருப்பதில்லை. பல வருடங்களாகப் பார்த்துச் சலித்த ஊரையும் இவ்வகை பிரயாணங்கள் இரசிக்க வைக்கும்.
ஊர்க் கோவிலின் கூரையில் காய்ந்து கிடக்கும் மாலைகளையும், எட்டாக்கனியாக இருக்கும் சில மரங்களின் கிளையைப் பிடித்திழுத்து கனிபறித்துச் சுவைக்கும் யோகமும், மழையின் போது, சாலைகளில் கனரக வாகனங்களின் சக்கரங்களில் துளித்துளியாய் தெறித்திடும் மழைநீரை நனையாமல் இரசிக்கவும், நம்மை தொடர்ந்து வருகிறதே என நிலவினைப் பார்த்து சிறுபிள்ளைகள் குழம்பவும் பேருந்து பிரயாணம் அவசியம்.
எனக்கும் அப்படித்தான். எந்தவொரு நாளின் தொடக்கமும் முடிவுமாக அமைவது எனக்கு இந்த இடைவெளிதான். காலையில் பேருந்திற்காகக் காத்திருந்து ,அது வரும் குறியறிந்தால் ஒருவகை துள்ளல் பிறந்துவிடும். அன்றைய நாளில் அதுவரை நடந்தவற்றையும், அதற்குப் பிறகு நடந்தவற்றையும் பற்றி என் மனம் ஒன்றும் சிந்திக்காமல் சகல நிம்மதியுடன் ஜன்னலில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.
நான் முன்பெல்லாம் கண்டிராத விஷயங்களை இவ்வகை பிரயாணங்கள் எனக்குத் தெளிவு படுத்தும். அனைத்தையும் கூர்ந்து கவனித்தால் சுற்றிலும் குழப்பமாக இருந்த விடயங்கள் தெளிவாகவும், தெளிவாக இருந்த விடயங்களின் நுட்பத்தையும் காணலாம். மேலும் தொடர்ச்சியாக நிகழ்வுகளைக் கவனிக்க நேர்ந்தால், பல மனிதர்கள் வாழ்வின் ஏற்ற இரக்கங்களைப் பார்த்து நமது வாழ்க்கையைத் திருத்திக்கொள்ளவோ திருந்திக்கொள்ளவோ அது உதவும்.
நான் பேருந்து ஏறியபின் சில நிமிட தூரத்தில்,ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் வேலி இருக்காது,ஆனால் வகை வகையாய் ரோஜாச் செடிகள் இருக்கும். மரங்களும், செம்பருத்திச் செடிகளும் அந்த வீட்டை அழகாய் அலங்கரித்திருக்கும். வீட்டில் இருப்பவர்களைப் பற்றி ஏதும் தெரியாது என்றாலும் அந்த வீட்டுத் திண்ணையில் அந்த வயதாகி மெலிந்த தேகம் கொண்ட ஒரு பாட்டி இருப்பார். அவருக்குப் பெரிதாக அங்கு வேலை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நான் பார்த்தவரையில் திண்ணையில் அரிசியைப் பரப்பி அதில் கல் எடுக்கவோ அல்லது வேறொன்றிற்கோ ஒவ்வொன்றாகத் தனது ஆள்காட்டி விரலில் அரிசிகளை நகர்த்தியே காலம் நகர்த்தியவர். அவ்வப்போது வளை முதுகுடன் வலிய வந்து முன்னிருந்த செடிகளை நீராட்டுவார்.
சுற்றிலும் மற்றவர்கள் இருந்தும் நான் அவரையே பல வருடங்கள் கவனித்து வந்தேன். இன்னும் சற்று தூரப் பயணத்தில் சாலையோர மரமொன்று இருக்கும். அதையொட்டி தேங்காய் நார் தொழிற்சாலை இருக்கும். அதன் சுற்றுச் சுவருக்கும் இந்த மரத்திற்கும் சில அடி இடைவெளி மட்டுமே. அந்த இடைவெளியில் ஒரு சமாதி இருக்கும். நாம் நினைக்கும் சிமெண்ட் பூசிய சமாதி இல்லை, மணலால் மூடிய சமாதி. அதில் தெற்குப் பக்கம் சிலுவை ஒன்று நடப்பட்டு இருக்கும். அது எப்படித் தனியாக ஒரு சமாதி மட்டும் இருக்கிறது என்ற கேள்வி அதைப் பார்க்கும்போதும், அதைப் பற்றி நினைக்கும் போதும் எனக்கு எழாமலில்லை.
காலப்போக்கில் எல்லாம் மாறுபவை தானே. ஒருவேளை அந்தத் தொழிற்சாலை இருந்த இடம் இடுகாடாக இருந்திருக்கலாம். அல்லது தார்ச்சாலை போடும் போது இருந்த இடுகாட்டைச் சமன் செய்திருக்கலாம். இல்லையேல் வேறு காரணமாகவும் இருந்திருக்கலாம்.
இன்னும் சில தூரங்களில் ஆங்காங்கே சிறு சிறு வீடுகளில் மக்கள் இருப்பர். அருகே சாலைக்கு மிக அண்மையில் ஒரு சிதைந்த வீடு இருக்கும். ஓட்டு வீடாக இருந்திருக்க வேண்டும். அதன் கூரையில் வைக்கப்படும் கட்டைகளும் மழையில் நனைந்தும், சிலது இற்றுப்போயும் உள்ளது. சுவர்களில் மழைநீர் வழிந்துபோன இடங்களில் பச்சையாகப் பாசிகளும் வளர்ந்துள்ளது.
அதன் அருகில் இருந்த மரத்தின் இலைகளில் பாதி அந்த சிதைந்த வீட்டில் தான் இளைப்பாறும் போலும். வீட்டின் இடதுபுறம் பழங்கால கார் ஒன்று துறு பிடித்தும், முன்பக்கங்கள் உடைந்தும் சிதைந்தும் இருந்தது. கொடிகளும் அந்த சிதைந்த செங்கல் சுவரும், பாசிகளும் என அந்த வீட்டின் காட்சிமட்டும் இரம்மியமாக இருக்கும்.
எப்போதும் மனிதர்கள் வசிக்கும் இடங்களை விட ,இவ்வகையான கைவிடப்பட்ட வீடுகள் பல வகையான ஞாபகங்கள் சுமந்திருக்கும். இந்த ஞாபகங்கள் சில காலங்களில் சிலருக்கு அமானுசியமாகத் தோன்றலாம். அது இயல்பு தான். இயக்கம் இருந்தால் தான் எல்லாவற்றிற்கும் உயிர்ப்பு. இயக்கம் இல்லை என்றால் இருப்பிடமாய் இருந்ததும் பிணமாகிவிடும். தூக்க முடிந்த பிணங்களைப் புதைக்கிறார்கள். இது போன்ற வீடுகளை எண்ணச் செய்ய முடியும்.
போகும்போதும் வரும்போதும் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பதே ஒரு பொழுதுபோக்கு தான். அன்று கல்லூரி பருவத்தேர்வு முடிந்து இரண்டு மாதம் கழித்து மீண்டும் எனது கவனிப்பைத் தொடங்கினேன். வலப்பக்கமாய் என் கவனம் சென்றது. அந்தப் பாட்டி வீட்டில் எதற்கோ பந்தல் போட்டுப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஒருகணம் பிடிபடாத அந்தக் காட்சியைக் கூர்ந்து கவனித்தேன். திண்ணையில் வழக்கமான அரிசிகள் பரப்பப்படாமல் சுத்தமாய் இருந்தன. நான் தினமும் காணும் அந்தக் காட்சியில் இன்று கதாநாயகி காணாமல் போனதை எண்ணி என் மனம் கனத்தது. இனி அங்குப் பார்க்க என்ன இருக்கின்றது ? என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
அந்தச் சமாதியில் கூட, ஊன்றி வைத்திருந்த சிலுவை எங்கோ காணவில்லை. அப்படி அதை யார் எடுத்திருப்பார். இல்லையேல் அதுவாக கீழே விழுந்திருக்குமோ தெரியவில்லை. மண் மட்டும் மேடாய் இருந்தது. அந்தச் சமாதியில் தலை எது, கால் எது என என்னைப் போன்று அதைக் கவனித்தாரன்றி வேறு எவராலும் சொல்ல முடியாது.
அன்று அந்த சிதைந்த வீட்டில், இரண்டு கார்கள் இருந்தன. இல்லை, மூன்று இருந்தது அந்த சிதைந்து நசுங்கிப்போன காரையும் சேர்ந்து. அந்த வீட்டை நான்கைந்துபேர் ஏதோ செய்யப் போகிறார்கள் எனத் தோன்றியது. அந்த வீட்டைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது எனக்கு. அடுத்த நாளே அங்கு நின்றிருந்த எந்த காரும் என் கண்ணில் படவில்லை. அந்த நசுங்கிய பழைய காரையும் காணவில்லை. பாவம், அந்த கார் ஒன்றே அந்த கைவிடப்பட்ட வீட்டிற்குத் துணையாய் நின்றிருந்தது. இனி யாரிடம் உரையாடி பொழுதைக் கழிக்கும் அந்தப் பாவப்பட்ட வீடு.
அதன் பிறகு மூன்று மாதங்கள் கடந்து விட்டது. இன்று அந்தப் பாட்டி இருந்த வீடு வெறிச்சோடி இருந்தது. உண்மையில் அவர் இரண்டு மாதம்முன் தான் இறந்தார். அதற்கு முன் இறந்தது அந்த வீட்டைச் சேர்ந்த வேறு யாரோ ஒரு நபர். அன்று மாலை வீடு திரும்பும் போதே இதைத் தெரிந்து கொண்டேன். அதே திண்ணையில் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். நான் இவரைப் பார்த்தவுடன் முன் கனந்திருந்த மனது சற்றே இலேசானது. எனக்கு ஏதோ, சினிமாவில் பிடித்த கதாபாத்திரம் இறந்துவிடக்கூடாதே என்ற தவிப்பை இந்த யாரோ பெயர் தெரியாத பாட்டி தந்துவிட்டார். அதன் பிறகு மறுபடியும் அவ்வகையே பந்தல் போட்டு, வீட்டின் முன் மனிதர்கள் கூட்டம் என்றும் காணா அளவு இருந்தது.
இன்றும் அவர் திண்ணையில் இல்லை. ஆனால் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். எனக்கு நெருக்கமானவர் இறந்தது போலிருந்தது. என் மனதிற்குள்ளேயே அவருக்காகத் துக்கம் அனுசரித்தேன். அதன் பிறகு வெகு சில நாட்களிலேயே அந்த வீட்டுக் குடும்பம் வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டனர் போலும். செடிகளெல்லாம் வாடி இருந்தது. இப்போது திண்ணையை மர இலைகள் பரப்பி இருந்தது.
அந்த சிதைந்த வீட்டை இடித்து விட்டனர். அங்கு வேறு ஏதோ கட்டிடம் கட்ட ஆயத்தமானார்கள். இன்னும் சில நாட்களில் அதுவும் கட்டி முடிக்கப்படும். பழைய சிதைந்த இடிந்த வீடு இருந்த இடம் மிகப் பிரம்மாண்டமாய் தயாராகிக் கொண்டிருந்தது. இனி அந்த இடத்திற்கு உயிர்ப்பு வந்துவிடும். மக்கள் நடமாட்டம் இருக்கும்.ஆராவாரம் இருக்கும். எல்லாம் இருக்கும். ஆனால் அந்த இடிந்த வீடும், நசுங்கிய காரும் சத்தமாய் பேசிக்கொள்ளும் நிசப்தம் மட்டும் இருக்காது என்பதை அறிவேன்.
கடைசியாய் அந்தச் சமாதி மண் மேடாய் இல்லாமல் இயற்கையாகவே சமன் செய்யப் பட்டிருந்தது. இனி அங்கொரு சமாதி சிலுவையுடன் தெற்கு வடக்காக இருந்தது என யார் சொன்னாலும் அதை மக்கள் நம்புவது சற்று சிரமம் தான்.