அரசு நிர்வாகத்திற்கு உதவக்கூடிய புறநானூறு கூறும் செய்திகள் பற்றிய கட்டுரை
அறிமுகம்
பிறகு இக்காலத்தில் அது மக்களாட்சியை விரும்புகிறது. ஒரே உடலின் இருவேறு உறுப்புகள் தங்களுக்குள் தாங்களே கட்டளையிட்டுக் கொண்டு ஓர் அழகிய ஓவியத்தை உருவாக்குகின்றன. அதுபோல், ஒரே நாட்டைச் சார்த்தோர் தங்களுக்குள் தாங்களே கோரிக்கையும் வைத்துக்கொண்டு, அதை நிராகரித்தும், நடைமுறைப்படுத்தியும் எய்தப்படும் அரசியல் ஓவியமாக இன்று மக்களாட்சி நம் கண் முன் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
அதற்கும் போதிய அளவில் அறிவுரைகளை முடியாட்சி காலத்தில் உருப்பெற்ற நமது புறநானூறு, என்னவெல்லாம் வழங்குகிறது என்பதைக் கூறுவதாக இந்தக் கட்டுரை அமைகிறது .இதன் தலையாய நோக்கமே மக்களை வழிநடத்தும் ஒரு மன்னனின் உத்திகளைப் புரிந்துகொள்வதாகவே அமைந்துள்ளது. அது இன்றளவும் நம்மை நாமே ஆண்டுகொண்டிருக்கும் போதும் பயன்படுகிறது என்பதுதான் நாம் அறிந்துகொள்ளவேண்டியுள்ளது.
புறநானூறும் அரசியலும்
புறநானூறு என்பது சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்று. கடவுள் வாழ்த்தோடு சேர்த்து மொத்தம் நானூறு பாடல்களைக் கொண்டது. 157 புலவர்கள் பாடியுள்ள பாடல்கள் இதில் உண்டு, அதில் 18 பெண்பாற் புலவர்களும் அடக்கம். நான்கு முதல் நாற்பது வரையிலான அடியெல்லையைக் கொண்டது. பாவகை என்பது சங்க இலக்கியங்களுக்கு உரித்தான ஆசிரியப்பாவாகும்.
பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.இதனைத் தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் எனவும் கூறுவர். புறம் என்று பெயரிலேயே வந்ததால் இதன் பாடுபொருள் புறம் சார்ந்தது என்பது தெளிவு. சங்க இலக்கியப் புற நூல்களில் பல மன்னர்களைப்பற்றிப் பெருவாரியான செய்திகளைச் சுமந்திருக்கும் நூல் இதுவே. பதிற்றுப்பத்து சேரர்களை மட்டும் பாடுகிறது. ஆதலால், மூவேந்தர்கள், சிற்றரசர்கள், புகழ்பெற்ற புலவர்கள் என அனைவரின் வரலாற்றுக் குறிப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
மற்ற அற நூல்கள் வாழ்வியல் நெறிகளை எடுத்துரைப்பனவாக உள்ளன. அக நூல்களும் தமிழர்களின் இன்ப வாழ்க்கையோடு இன்னும் பிற செய்திகளைக் கூறுகின்றன. புறநூல்களில், குறிப்பாகப் புறநானூற்றில் புலவர்கள் மன்னனை வாழ்த்தியும், அறிவுரை கூறியும், புகழ்ந்தும், சினந்தும் பல பாடல்களைப் பாடியுள்ளனர். அக்கால முடியாட்சிக்குத் தேவையான கருத்துக்களை, யோசனைகளைக் கூறினார்கள்.
" சங்க காலத்தில் தமிழக ஆட்சி முடியாட்சி எனினும் குடியாட்சி போன்ற சிறப்புடன் இருந்தது." - ம. து. ச. - ப(19)
என்ற வரிகள் சங்க காலத்து அரசியல் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது. அது இன்றும் மக்களாட்சி நடைபெறும் நாளிலும் உதவுகிறது என்பது தான் நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதை அவர்களின் பாடல்கள் வழியே ஒவ்வொரு யோசனைகளாக இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது.
நிலமும் நீரும்
" நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
... ... ... ... ...
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருட்க" - புறம் 18(22-23, 28)
என்ற வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
நற்றிணையில் முதல் பாடலிலேயே தலைவி ஒருத்தி நீர் இல்லையானால் உலகம் இயங்காது என்று கூறுகிறாள்.
" நீரின் றமையா உலகம் போல " -
என்ற வரிகள் மூலம் நீரின் முக்கியத்துவத்தை உணரலாம். வள்ளுவரும் நீரின் இன்றியமையாமை உணர்ந்து அதைக் கடவுள் வாழ்த்திற்கு அடுத்த அதிகாரமாக வைத்துள்ளது இங்கு உற்றுணரத்தக்கது. நீர் இல்லாமல் உலகில் ஒரு காரியமும் நடக்காது.வாய்க்கால்கள், குளங்கள், அணைகள் என எல்லாம் இருந்தாலும் மழை இல்லாமல் போனால் அந்த நீரும் கிடைக்காது என்பதை,
"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையை தொழுக்கு" - குறள் 20
என்ற இந்தக் குறட்பாவின்வழி நம் அறிந்துகொள்ளலாம்.
நீதி வழுவா நடுநிலைமை
பாரபட்சம் இன்றி பொருள் படைத்தோர், இல்லாதோர், என அனைவருக்கும் நீதி
நீதித்துறையிலும் துலாக்கோலின் குறியீடு கவனிக்கத்தக்கதாய் இருக்கிறது. எதிரில் குற்றவாளியாக நிற்பவர் எவராக இருந்தாலும், துலாக்கோலின் நாக்கினைப்போல் நடுநிலையான முடிவை ஓர் அரசன் கொடுக்க வேண்டும் என்பதைக் காரி கிழார் பாடல் வழி நாம் அறியலாம்.
"
பற்றல் இலியரோ! நின்திறம் சிறக்க!" - புறம். 6(9-16)
என இடம்பெறும் இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறியலாம். மதுரைக்காஞ்சியும் கிட்டத்தட்ட இதே கருத்தை முன்வைக்கிறது.
" ஞெமன் கோலன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறங்கூறு " - மது.கா 491-492
என்ற இந்த வரிகளும் துலாக்கோலைக் குறிக்கின்றன.
மக்கள் தன்னையே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை ஓர் ஆட்சியாளன் உணர்வானென்றால், தன்னுடைய பெருங்கடமையே நீதி வழுவாத செங்கோல் என்பதை அறிவானானால், அவனால் குற்றம் நடப்பதைப் பார்த்துப் பொறுத்துக்கொண்டு இருக்க இயலாது. அவனுடைய கடமை குற்றம் கடிதல் என்கிறார் வள்ளுவ பெருமான். இச்செய்தியை,
"
வடுவன்று வேந்தன் தொழில்" - குறள் 549
என்ற இந்த குறட்பா வழி நாம் அறிந்து கொள்ளலாம்.
அமைச்சர்கள்
அரசியலைப் பொறுத்த வரையில் ஆலோசனைகளைக் கொடுக்க அமைச்சர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அரசனால் எடுக்க முடியாத, குழப்பம் தரக் கூடிய விடயங்கள் பற்றியும் தனது முடிவு சரியானதா என்ற சரிபார்ப்பிற்கும்
" பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேதநெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை" - புறம் 2(17-20)
என்ற இந்த வரிகள் மூலம் முரஞ்சியூர் முடிநாகராயர் கூறுகிறார். அமைச்சர்களின் இன்றியமையாமையை நாம் இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
முப்பால் வழங்கிய
" அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்" - குறள் 638
என்ற குறட்பாவாழி நாம் அறிந்து கொள்ளலாம்.
சீவக சிந்தாமணியில், சீவகனைக் கண்டுகொண்ட தாய் விசயை, அவனுக்குப் பலவாறு அரசியல் அறிவுரைகளைக் கூறுகிறாள். அதில் அமைச்சர்கள் பற்றி அவள் கூறும் விடயங்கள் கவனிக்கத்தக்கது. அமைச்சர்கள் பல அறநூல்களைக் கற்றவர்கள். அவர்களை ஒரு மன்னன் கண்போல பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிறாள். மந்திரி சுற்றம் மற்றும் தந்திரிகளின் சுற்றம் ஆகிய இரண்டையும் இன்னவர் இதற்குரியவர் என அறிந்து அவர்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்வதே ஒரு வெற்றி நோக்குடைய ஆட்சியாளரின் சூழ்ச்சியாக இருக்கமுடியும் என்கிறாள் விசயை. இதனை,
" கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலுஞ்
சுற்றம் சூழ்ந்து பெருக்கலுஞ் சூதரோ
கொற்றங் கொள்குறிக் கொற்றவற் கென்பவே" - சீவக.சிந். 1921
என்ற வரிகள் மூலம் நாம் தெளிந்து கொள்ளலாம். எனவே, ஓர் ஆட்சியாளனுக்கு அமைச்சர்கள் என்போர், மேற்கூரையைத் தாங்கி பிடித்திருக்கும் தூண்களைப் போல இன்றியமையாதவர்கள் என்பதை நாம் உணரலாம்.
வரி வசூலிப்பு
அரசியலில் பொருளாதாரம் தொடர்பான வழிமுறைகளும் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளன. ஒரு மன்னன் எவ்வளவு வரி வசூலிக்கலாம், அது எந்த எல்லையோடு நிற்க வேண்டும், அப்படி நிற்கவில்லை என்றால் மக்களுக்கு என்னென்ன துன்பம் நேரும் என அனைத்தும் நமது வரலாற்றுக் களஞ்சியத்தில் மொழியப்பட்டுள்ளது. சேரர்களின் வரி வசூலிப்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவர்கள், தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றத்தார், இல்லறத்தான், அரசு என மக்களிடம் மன்னன் ஆறில் ஒரு பங்கு வரியை வாங்கினான் என்பதை,
" படுவது உண்டு பகல்ஆற்றி
இனிதுஉருண்டை சுடர்நேமி
முழுது ஆண்டோர் வழிகாவல!" - புறம். 17(6-7)
என்ற இந்த வரிகள் மூலம் நமக்குத் தெரியப்படுத்துகிறார் குறுங்கோழியூர் கிழார்.
சீவக சிந்தாமணியிலும் இதே வரி வசூலிப்பு முறை, தாய் விசயையால் சீவகனுக்குப் போதிக்கப்படுகிறது. அரசியல் முறையால் ஆறில் ஒரு பங்கு வரியை வரையறுத்து அப்பொருளைச் சேர்க்கச் சொல்வதாக அந்தத் தாயின் போதனை அமைந்துள்ளது. இதை,
" நீதி யாலறுத் தந்நிதி யூட்டுத" - சீவக 1920
என்ற வரிகள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஒரு வேளை வரி வசூலிப்பு, முறை தவறி நடைபெறுமானால், அது எந்த அளவு மக்களைப் பாதிக்கும் என்பதையும் புறப்பாட்டு நமக்கு எடுத்துரைக்கிறது. யானை புகுந்த விளைநிலம் எப்படி நிலை திரிந்து அழியுமோ, அதுபோல் அறிவுடைய அரசன் வரி வாங்கும் முறை அறிந்து வாங்காவிட்டால், அவன் நாட்டில் செல்வம் பெருகாது, அரசனும் உயரமாட்டான் என்கிறார் பிசிராந்தையார். இச்செய்தியை,
" அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து, நாடுபெரிது தந்தும்
.... .... .... ....
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான், உலகமும் கெடுமே" - புறம் 184(5-6,10-11)
என்ற இந்த வரிகள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். எனவே, வரிவசூலிப்பு முறையும் அரசியலில் முக்கிய இடம் பெறுகிறது என்பது தெரியவருகிறது.
வறுமை ஒழிப்பு
ஓர் அரசனால் முயன்றும் முடியாதவற்றுள் ஒன்று வறுமை ஒழிப்பு. எனினும் சங்க காலத்து அரசர்கள் அதையும் ஒழித்த வல்லமை வாய்ந்தவர்களாய் இருந்துள்ளனர். ஒரு நல்ல ஆட்சியாளரின் நாடு எப்படி இருக்கவேண்டும் அல்லது எப்படி இருந்தது என்பதைப் புறநானூறு நமக்குக் கூறுகிறது. அங்குள்ள மக்கள் எந்தத் தீயை மட்டும் அறிய வேண்டும் என்றால், சூரியனின் கதிர்களையும், சோறு சமைக்க மூட்டிய அடிப்பின் தீயையும் அதன் வெம்மையையும் மட்டும் அறிந்தவர்களாக இருப்பர். மாறாக வறுமையால் வரும் வெம்மையை அறியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதை,
" சோறுபடுக்குந் தீயோடு
செஞ்ஞாயிற்று தெறல் அல்லது
பிறிதுதெறல் அறியார் " - புறம். 20(7-9)
என்ற இந்த வரிகள் மூலம் நம் தெரிந்து கொள்ளலாம்.
இதைப்போல் ஓர் ஆட்சியாளரின் தலையாய கடமையாகச் சான்றோரால் முன்வைக்கப்படும் ஒன்று ' எனக்கு ஏதேனும் ஈக' என ஒருவன் கேட்காதபடி, நாட்டை முன்னேற்றி, இரந்து கேட்போரின் இல்லாமையை இல்லாமல் ஆக்குவதே எனக் கூறலாம். உலகில் இரவலர்களின் இல்லாமையைத் தீர்க்கும் வன்மையுடையவன் எனப் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்பவன் போற்றப்படுகிறான்.
" இன்மை தீர்த்தல் வன்மை யானே " - புறம்.3(26)
என்ற இரும்பிடர்த் தலையாரின் வரிகள் மூலம் நாம் கண்டுகொள்ளலாம்.
வள்ளுவரும் இவ்வகை இரந்து உயிர் வாழ்வோரை எண்ணி மனம் கசிவதைச் சில குறட்பாவாழி நாம் அறிந்துகொள்ளலாம். இப்படி இவர்களை இரந்து வாழும்படி செய்தவன் தானும் இரப்போனாய்ப் பிறந்து அலைந்து திரிந்து பிச்சை கிடைக்காமல் அழிந்து போகட்டும் எனச் சபிக்குமளவு அவரையும் இந்த அளவிற்கு மக்களின் வறுமை நிலை மனதளவில் பாதித்துள்ளதைக் காணமுடிகிறது.
" இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான் " - குறள் 1062
என்ற இந்தக் குறளில், வள்ளுவரின் கோபக்குரல் ஒலிப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஏழை, இரப்போன், பிச்சைக்காரர் என இது போன்ற சொற்களும் கூட மொழிகளில் இடம் பெறாத அளவிற்கு நல்லாட்சி செய்யும் மன்னனே அல்லது ஆட்சியாளனே, மக்கள் போற்றும் நல்லாட்சியாளன் என்பதில் ஐயமில்லை.
முடிவுரை
இன்றைய தேதியில் ஆட்சியாளருக்கு மட்டுமல்லாது அனைவர்க்கும் தேவைப்படும் அறிவுரைகளாகவே இவை விளங்குகின்றன. ஒரு நாட்டை ஆளும் மன்னனுக்கு எந்த அளவிற்கு அரசியல் அறிவு இருக்கவேண்டுமோ, அந்த அளவிற்கு அந்நாட்டு மக்களுக்கும் அரசியல் குறித்த விழிப்புணர்வு அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது. மரம் பட்டுப்போனாலும் தன்னை வளர்த்த மரத்தைத் தாங்கிப் பிடித்திடும் ஆலமர விழுதைப்போல், நமது நாட்டை புரிந்துகொள்ளவும், பாதுகாத்துக்கொள்ளவும், புறநானூறு இதுமட்டுமன்றி இன்னும் நிறைய அறிவுரைகளைத் தனது பாடலின் எதோ ஒரு மூலையில் பொதிந்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. பழந்தமிழரின் வீரத்தோடு கலந்த சொற்களில் சிலவே இந்தக் கட்டுரையின் பொருண்மையாக அமைந்துள்ளது. எனவே, இக்கால நடைமுறைகளுக்கும் ஏற்றதாகவே புறப்பாட்டின் அறிவுரைகள் அமைந்துள்ளன என்பதை இந்தக் கட்டுரை வழி நாம் அறிந்து கொள்ளலாம்.
அடிக்குறிப்புகள்
l அ. ப. பாலையன் - புறநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை- 14, 2018.
l நாமக்கல் கவிஞர் - திருக்குறள் மூலமும் உரையும், சுதர்சன் பதிப்பகம், சென்னை - 600017.
l புலியூர்க்கேசிகன் - நற்றிணை, பாரிநிலையம், சென்னை - 600001, 2001.
l திருத்தக்கதேவர் - சீவகசிந்தாமணி, சாரதா பதிப்பகம், சென்னை - 14, 2013.
l இரா. நாகசாமி - தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு, 1969.
l மது.ச.விமலானந்தம் - தமிழ் இலக்கிய வரலாறு, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி .நகர், சென்னை - 17.
l ஞா. மாணிக்கவாசகன், உமா பதிப்பகம், 171(18), பவளகாரத் தெரு, மண்ணடி, சென்னை - 600001, 2016.