அறுபத்து மூன்று நாயன்மார்களுள் இருக்கும் ஆறு அரசர்கள் பற்றி தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்
அறிமுகம்
சிவபெருமானுக்கு அனைத்து தரப்பு மக்களும் தொண்டு செய்து தனது பக்திச் சிறப்பை உலகுணர்த்தினர். அனைத்து குலத்தாரும், அனைத்து நாட்டினரும் அவருக்கு அன்பு செலுத்தினர். இல்லாமை இல்லாத அரச பெருமக்கள், குறுநில மன்னர்கள் என நிலையாமை கடந்த இறைவனுக்கு தொண்டு செய்து வந்ததே சிவத்தின் பெருமை உணர்த்தும். அவ்வரசர்கள் காட்டிய பக்தி நெறியை பார்ப்போம்.
கோச்செங்கட்சோழ நாயனார்
![]() | |
|
முற்பிறவியில் சிலந்தியாகத் தோன்றி, மரத்தடியில் இருந்த இறைவன் மீது இலைகள் உதிராமல் இருக்க வலை பின்னி சிவத்தொண்டு செய்து, அதன் பயனாய் சோழ மன்னன் சுப தேவன் – கமலவதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெரியபுராணமானது,
“ பெருந் தண் சிவாலயங்கள்
காதலோடும் பல எடுக்கும் தொண்டு
புரியும் கடன் பூண்டார்”
என இவரின் திருப்பணிகள் பற்றிக் கூறுகிறது.
“வாய்ச்சங்கம் இழைத்த காரணத்தால் அதை
கோச்செங்கண் என்று கூட்டினியே “
என்ற வரிகளுக்குரியவர். கண்கள் சிவந்து பிறந்த குழந்தைக்கு தாயானவள் இறக்கும் போது செங்கண்ணன் என அழைத்தபடியே,அனைவராலும் அழைக்கப்பட்டார்.
“ தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கு அடியேன் “
என சுந்தரரால் பாடப்பட்ட சோழ மன்னர் இவர். 20 மாடக்கோவில்கள் அமைத்தார்.70 கோவில்களில் திருப்பணிகள் செய்தார். திருப்பணிகளால் இறைவனை அடைந்த அரச மரபு நாயனார் கோச்செங்கட் சோழர் ஆவார்.
புகழ் சோழ நாயனார்
![]() |
அடியார் சிரத்தை தாம்பூலத்தில் வைத்துப் புகழ் சோழர் நெருப்பில் இறங்கும் காட்சி |
உறையூரைத் தலைமையகமாகக் கொண்ட சோழ வள நாட்டை ஆண்டு வந்தவர். கரூர் தெய்வத்தை விரும்பி வணங்கியவர். ஆலய பராமரிப்பு முதல் அன்றாட தெய்வ வழிபாட்டை மேற்கொண்டவர். தான் சார்ந்த எதுவும் அடியார்களுக்கு துன்பம் கொடுப்பதை விரும்பாதவர். எறிபத்த நாயனாரின் கோபத்திற்கு ஆளான யானையை வளர்த்தது எண்ணி மனம் வருந்தி உயிரை மாய்க்கவும் சென்றவர்.
அதிகன் என்ற குறுநில மன்னன் இவருக்கு கப்பம் கட்ட மறுத்தான். போர் தொடுத்தார் புகழ் சோழர். செல்வமும், எதிரிகள் தலையும் சூறையாடப்படுகின்றன. குவித்து வைத்திருந்த தலைகளைக் கண்ட சோழனின் மகிழ்ச்சி கணநேரம் நீடிக்கவில்லை. தலைகளில் ஒரு தலை திருநீற்றைத் தாங்கி இருந்தது. தன்னுடைய வீரர்கள் எதிரிகளோ என நினைத்து சிவனடியாரைக் கொன்றுவிட்டதை எண்ணி மனம் வருந்தினார்.
“ சீர் தாங்கும் இவர் வேணிச்
சிரம் தாங்கி வரக் கண்டும்
பார் தாங்க இருந்தேனோ
பழிதாங்குவேன் என்றார்”
என பெரியபுராணம் இவரது மனவருத்தத்தை பாடுகிறது.
இதனால், தாம்பூலத்தில் அடியார் தலையை வைத்து அதை தன் தலையில் வைத்து தீயில் இறங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
“ பொழில் கருவூர் துஞ்சிய புகழ்சோழர்க் கடியேன் “
என்ற சுந்தரரின் வரிகளுக்குரியவர்.
கழற்சிங்க நாயனார்
![]() |
இறைவனுக்காக வைத்திருந்த மலரை முகர்ந்து பார்த்ததால்,செருத்துணை நாயனார் அரசியின் மூக்கை வெட்ட,கழற்சிங்கர் அரசியாகிய தன் மனைவியின் கையை வெட்டிய காட்சி |
பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனே கழற்சிங்க நாயனார் ஆவார். இராசசிம்மன் எனவும் அழைப்பர். ஆரூர் இறைவனின் ஆலய அழகை கண்டு வியந்து கொண்டிருந்த வேளை, மலர் மண்டபத்தில் தனது மனைவி மூக்கறுபட்ட செய்தி அறிந்து அங்கு சென்றார்.
இறைவனுக்கு தொடுக்கவிருக்கும் பூக்களில் ஒன்றை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காய் செருத்துணை நாயனார் மூக்கை வெட்டியதாக ஒப்புக்கொண்டார். செருத்துணை மேல் அளவற்ற கோபம் கொண்டார் கழற்சிங்கர். மூக்கு முகரும் முன், மலரை எடுத்த கையை அல்லவா முதலில் வெட்டியிருக்க வேண்டும் என்று தனது வாளால் தன் மனைவியின் கையை வெட்டியவர்.
“ ஒரு தனித் தேவி செங்கை
உடைவாளால் துணித்த போது
பெருகிய தொண்டர் ஆர்ப்பின்
பிறங்குஒலி புவிமேல் பொங்க”
என பெரியபுராணம் குறிக்கிறது.
“கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியாருக்கும் அடியேன்”
என்று சுந்தரரால் பாடப்பட்டவர். இவரே காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டியவர். அதன் குடமுழுக்கு தள்ளிப்போட காரணமானவர், மனதிற்குள் கோவில் கட்டிய பூசலார் ஆவார். இக்கோவிலே தஞ்சை பெரிய கோவிலை கட்ட இராசராசசோழனுக்கு உந்துதலாக இருந்தது. தண்டி நாயன்மாரும் இவர் காலத்தவரே.
நின்றசீர் நெடுமாற நாயனார்
![]() |
வெப்புநோய் தீர்ந்தபின் நின்றசீர் நெடுமாறன் சைவ நூல்களை நெருப்பிலும் நீரிலுமிட்டு சைவ மேன்மையை உணர்த்தும் காட்சி |
சம்பந்தரோ வந்த தீயை,
“ பையவே சென்றங்கு மன்னர்க்கு ஆகுக”
என வந்தவழி அனுப்பி வைக்க, பாண்டியனுக்கு வெப்புநோய் வந்து வாட்டியது. சமணர் முயன்றும் விடாத நோய், மடப்பள்ளி சாம்பல் சம்பந்தர் கையில் திருநீறாகி, “ திருநீற்றுப் பதிகத்தால்” தீர்ந்தது.
“அந்நாளில் ஆளுடைய
பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம் பெருகச் செங்கோல்
உய்த்து அறம் அளித்து”
என தெய்வ சேக்கிழார் பாடுகிறார்.
சமணர் சாயம் வெளுத்தது. அனல்வாதம், புனல் வாதம் நடத்தி சைவம் வெல்ல, சமணர் பாண்டிய நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.
மங்கையர்க்கரசி வேண்டுகோளால் “ வேந்தனும் ஓங்குக” எனப் பாடி பாண்டியனின் கூனை சரிசெய்து நிமிர வைத்தார். அது முதல் நின்றசீர் நெருமாறனானார்.
சேரமான் பெருமாள் நாயனார்
![]() |
சுந்தரருடன் சேரமான் பெருமாள் நாயனார் கயிலை செல்லும் காட்சி |
பாணபத்திரனுக்காக விடுநரான சிவபெருமானின் கடிதத்தின் பெறுநர் என்னும் பேறு கொண்டவர் சேரமான். உவர்மண் படிந்த உடலைத் திருநீறு தரித்த உடலெனக் கருதி யானையிலிருந்து இறங்கி வணங்குவார். சிவபூஜை முடிந்து நடராசரின் சிலம்பொலி கேட்டவுடன் தான் உணவு உண்ணுவார். பெரியபுராணமும் இவரின் பக்தி நெறியை பின்வரும் பாடல்வரி மூலம் கூறுகிறது.
“ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார்
அளவில் இன்ப ஆனந்தம்
கூடப் பெற்ற பெரும் பேற்றின்”
ஒருநாள் தாமதமானதால் உயிர் மாய்த்துக் கொள்ள சென்ற போது தடுத்தாட்கொண்ட இறைவன் தாமதத்திற்கான காரணத்தையும் கூறினார்.
சுந்தரர் தமிழில் சற்று மயங்கியதாக சொல்லி சுந்தரரை அறிமுகப் படுத்தினார். இருவரும் நண்பர்களானார்கள். சுந்தரருடன் திருக்கயிலாயம் சென்றவர். தமிழின் ஆதியுலாவான திருக்கயிலாய ஞான உலாவைப் பாடியவர்.
“ கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்”
என சுந்தரர் இவரைப் பாடுகிறார்.
மங்கையர்க்கரசி நாயனார்
![]() |
பாண்டிமாதேவியாகிய மங்கையற்கரசியாரை சம்பந்தர் வணங்கும் காட்சி |
சோழ நாட்டில் பிறந்த இவர், பாண்டியனை மணந்து பாண்டிமாதேவியாகிறார். மானி என்ற இயற்பெயருடையவர். மங்கையருக்கெல்லாம் அரசியாக விளங்கியதால் ‘மங்கையர்க்கரசி’ என பெயர் பெற்றார். கணவர் கூன் பாண்டியனாவார். இவரை நின்றசீர் நெடுமாறனாக்கி, பாண்டிய நாட்டில் சமண ஆதிக்கத்தை வீழ்த்தி, சைவம் தழைக்க செய்த பெருமை இவரையே சாரும்.
தனது அமைச்சர் குலச்சிறை நாயனாரின் மூலம் சம்பந்தரை மதுரை வரவழைத்ததால் இது சாத்தியமானது.
“ வளவர்கோன் பாவை வரிவளைக் கடைமணி”
என்று சம்பந்த பெருமான் இவரைப் பாடுகிறார்.
“ எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே
இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரைப்
போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே”
என பெரியபுராணம் இவர் சமணர் என்னும் இடர் நீக்கிய பெருமையை கூறும். பாண்டிமாதேவி அவருக்கு மீனாட்சியம்மையாகவே தெரிந்தார். பாண்டியனின் வெப்பு நோயும் தீர்ந்து, சமண நோயையும் தீர்த்த அவர், பாண்டிய மாதேவி வேண்டுகோளுக்கு இணங்க கூன் பாண்டியனை நின்றசீர் நெடுமாறன் ஆக்கினார்.
“ வரிவளையால் மானிக்கும்”
என சுந்தரர் திருத்தொண்ட தொகையில் பாடிய பெண் நாயன்மார் இருவரில் ஒருவராவார்.
முடிவுரை
முற்பிறவி பயனாக செங்கண்ணனாரும், அடியார் இறக்க காரணமாக இருந்ததால் தன்னையே நெருப்பிற்கு இறையாக்கிய புகழ்சோழரும், இறைவனுக்காக தொடுக்கவிருந்த மலரை முகர்ந்து பார்த்ததால் மனைவியின் கையை துண்டித்த கழற்சிங்கரும், சிலம்பொலி கேட்காமல் ஆகாரம் உண்ணாத சேரமான் நாயனாரும், சம்பந்தரால் சைவம் மாறிய நெடுமாறனும், அதற்கு காரணமான அவரது மனைவியும் மங்கைகளுக்கெல்லாம் அரசியான மங்கையர்கரசியாரும் அரச மரபை சார்ந்து இருந்தாலும், வேண்டியவை தேவைக்கு அதிகமாக கிடைப்பினும் அவர்களுக்கு வேண்டியது என்னவோ இறையருளாகத்தான் இருந்துள்ளது.
மேற்கோள்கள்
1) பெரியபுராணம் -
2) திருத்தொண்டத் தொகை : https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/sundarar-thevaram-thiruththondaththogai-thillaivaal-anthanartham/#gsc.tab=0
3) சம்பந்தர் தேவாரம்:மூன்றாம் திருமுறை: https://shaivam.org/thirumurai/third-thirumrai/thirugnanasambandar-thevaram-thiruaalavai-mangaiyarkkarasi/#gsc.tab=0