சைவ அடியார்களுள் இருக்கும் குறுநில மன்னர்கள் ஐவர் பற்றிய குறிப்புகள் கொண்ட கட்டுரை
1. அறிமுகம்
7. முடிவுரை
அறிமுகம்
நாயன்மார்களுள் அரசர்கள் பலர் தாங்கள் முடியாட்சி கொண்டிருப்பினும், இறைவனுக்கு அகப்பட்டே அவனுக்குத் தொண்டே செய்தே நாயன்மார் என்னும் பெரும்பதவி அடைந்தனர். அரசனோ ஆண்டியோ, சிவத்தில் தம்மைச் சங்கமித்தவர்கள், சிவனடியாரிடம் அன்பு காட்டி அதன் மூலம் சிவத்திடமே அன்பு காட்டிய அனைவரும் சிவபதவி அடைந்தவர்கள் தாம்.
பேரரசுகளை ஆண்டு வந்த அரசர்கள் அடியார் தொண்டு செய்வதைச் சான்றோர்கள் போற்றினர். எவ்வளவு பெரிய மணிமுடிகளை வைத்திருந்தாலும், அவர்கள் அரசனின் பண்புகள் எனக் கூறும் அடக்கம் என்னும் உயர்ந்த பண்பைக் கொண்டிருந்தனர்.
ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் முன் அனைவரும் ஒன்றே என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களுக்குச் சற்றும் குறைந்தவர்களலலர் குறுநில மன்னர்கள். ஆட்சி செய்யும் நிலத்திற்கு தானே எல்லையும் அளவும். இறைபக்திக்குத் தான் எல்லைகள் உண்டோ?. அவர்களின் பக்திச் சிறப்பை இக்கட்டுரையில் காணலாம்.
இடங்கழி நாயனார்
இவர் குறுநில மன்னராவார். சோழ நாட்டு கொடும்பாளூரைச் சேர்ந்தவர். நெல், பொன் கொடுத்து திருப்பணிகள் செய்து வந்தவர். இவரால் மக்களும் சிவதொண்டு செய்தனர். இவரின் ஆட்சி வளம், மக்களின் சிவதொண்டு மூவம் வெளிப்பட்டது.
அவர்களும் கைநிறைந்த செல்வத்தை அடியார்களுக்காகச் செலவிட்டனர்.
எல்லா நாடுகளில் வருகின்ற பஞ்சம் அந்த நாட்டையும் எட்டிப்பார்த்தது. மக்கள் செல்வம் நாளாக நாளாகக் குறைய ஆரம்பித்தது. மக்கள் அன்றாடம் திருப்பணிகள் செய்யவும் அவதிப்பட்டனர். பஞ்சத்தால் அடியாருக்கு அன்னமிட இயலாமல் இருந்தார் மக்களுள் ஒருவர்.
எப்படியாவது அடியார்க்கு அன்னமிடுவதை நிறுத்தக்கூடாது என நினைத்தார். இதனால் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தார். அவருக்கு நெற்களஞ்சியத்தில் நெல்மணிகள் குவிந்து இருக்கும் தகவல் தெரியும். அரசின் நெற்களஞ்சியத்தில் களவாட எண்ணிய அவர், களவாடிய போது அகப்பட்டார். அவர் மன்னனிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.
அடியார் வேடத்தில் திருடியுள்ளீரே என இடங்கழி மன்னன் கேட்க அடியார்
வேடந்தான் திருட வைத்தது என நடந்ததைக் கூறினார்.அவரின் நோக்கம் மன்னனை வருந்தச் செய்தது. அவரையும் விடுவித்து, அரசின் நெற்களஞ்சியத்தையும் அடியார்களுக்காகத் திறந்து வைத்தவர்.
“நெல் பண்டாரமும் அன்றிக்
குறைவு இல் நிதிப் பண்டாரம்
ஆன எலாம் கொள்ளை முகந்து
இறைவன் அடியார் கவர்ந்து
கொள்க...... .......”
“மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் “
நரசிங்க முனையரைய நாயனார்
மூன்று அரசுகளின் முனையாக இருந்த திருமுனைப்பாடியை ஆண்டு வந்தவர் நரசிங்க முனையரையர். சுந்தரரும், திருநாவுக்கரசரும் திரு அவதாரம் செய்து ஊர் இது. மக்களுக்கும் மகேசனுக்கும் தொண்டு செய்து வந்தார் நரசிங்க முனையரையர்.
அடியார் தொண்டு, ஆலய பராமரிப்பு, முறைப்படுத்துதல், அடியாருக்கு
அடியாராக இருப்பது என இவரும் தமது பாணியில் சிவதொண்டு செய்து வந்தார்.
வீதியில் சிறுதேர் வைத்து விளையாடிய அந்தணர் பிள்ளையான சுந்தரரைப் பார்த்து அவரை வளர்க்க ஆசை கொண்டார். சுந்தரரை வளர்த்து, அவருக்கு அந்தணர் திருவும் அரச திருவும் கிடைக்கக் காரணமானவர். எப்போதும் ஆதிரைத் திருநாளில் அடியாருக்கு அன்னமிட்டு, பொன்னும்
கொடுப்பார். ஒருமுறை அடியார் வடிவில் ஊரே ஒதுக்கி வைத்த கொடியவனும் வந்தான்.
அவனுக்கு அன்னமிட வேண்டாமென மக்கள் மன்னனிடம் கேட்டுக்கொண்டனர். எனினும், அடியார் வடிவேற்றலே அவன் பாவம் அனைத்தும் அழிந்ததாகவே அர்த்தம் என்று கூறியதோடு அவனுக்கும் அன்னமிட்டு பொன் கொடுத்து அனுப்பிவைத்தார். இது அனைவரின் நன்மதிப்பைப் பெற்றது. இதை,
“ சீலம் இலரே எனினும்
திருநீறு சேர்ந்தாரை
ஞாலம் இகழ்ந்து அருநரகம்
எனப் பெரியபுராணம் பாடுகிறது. மேலும்,
“ மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்”
எனச் சுந்தரர் இவரைப் பாடுகிறார்.
மெய்ப்பொருள் நாயனார்
எதிரி முகமானாலும் சிவனடியார் தோற்றம் மெய்ப்பொருளின் வணக்கத்தைப் பெற்றது. சிவ உபதேசம் செய்யப் போவதாகக் கூறி, கையிலிருந்த ஓலையில் வளை எடுத்து அவரை தாக்கினார்.
“நினைத்த அப்பரிசே செய்து அருளினார் “
எனப் பெரியபுராணமும் இத்தருணத்தைக் குறிக்கிறது. கொலை முயற்சியை அருளினார் எனக் கூறக் காரணம் சிவவேடம் கொண்டிருந்ததே. இதைக் கண்டு தடுக்க வந்த மன்னனுக்கு நெருக்கமான தத்தனை மொய்பொருளார் தடுத்தார்.
“அடியார் வேடம் பொய்ப்பொருள் இல்லை அதுதான் மெய்ப்பொருள், என் உயிரை சிவத்திற்குக் கொடுத்தேன்” என்றார். மேலும் தத்தனிடம் “ இவர் நமர்” எனக் கூறி பத்திரமாக ஊர் எல்லையில் விடச்சொன்ன வேளை முத்த நாதன் தவறுணர்ந்தார். அடியார் கையால் மரணம் ஏற்பதைப் பெருமையாகக் கருதி சிவத்துடன் சங்கமித்தவர்.
“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்”
எனச் சுந்தரரின் வரிகளுக்கு உரியவர்.
“இன்னுயிர் செகுக்கக் கண்டும்
எம்பிரான் அன்பர் என்றே
நன் நெறி காத்த சேதி
நாதனார் பெருமை”
எனப் பெரியபுராணமும் இவரைப் போற்றுகிறது
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
பல்லவ மன்னனாவார். காஞ்சியைச் சேர்ந்தவர். அரசனுக்கான அனைத்து
கடமைகளையும் செய்தவர். தமிழ், வடமொழி கற்றவர். இதிகாச புராணங்களில் இதயத்தை பறிகொடுத்தவர் , இறைவனிடத்தில் தன்னையே பறிகொடுத்தார் .
வீடுபேற்றின் சுகம் தடுக்கும் விடயமாக இந்த அரச வாழ்க்கை இருக்கிறதாகத் தெரிந்தது அவருக்கு. நாளாக நாளாக அது சுமையானது. இறைச்சிந்தனை இருக்கும் என்னால் அரசாள முடியாதென. மகனுக்கு மகுடாபிஷேகம் செய்துவைத்தார். இதனைப் பெரியபுராணமும்,
“பார் அளிப்பார் அரசாட்சி
இன்னல் என இகழ்ந்து அதனை
எழில் குமரன் மேல் இழிச்சி ”
என்ப பாடுகிறது. தலங்கள் தோறும் சிவதொண்டனாகப் நடந்தே பயணப்பட்டு
இறுதியில் பெருமான் திருவடிகளில் இளைப்பாறினார்.
“ஐயடிகள் காடவர்கோன் அடியாருக்கும் அடியேன் “
கூற்றுவ நாயனார்
களப்பிர மன்னனான இவர் திருக்களந்தை என்னும் ஊரில் பிறந்தார். அடியார் வாழ்க்கையும் அரச வாழ்க்கையும் சேர்த்தே வாழ்ந்தார். மூவேந்தர்களை வென்று குறுநில ஆட்சியைப் பேரரசாக நிறுவினார். மூன்றில் சோழ மணிமுடி சூட விருப்பம் கொண்டார்.
வழக்கமாக மணமுடி சூட்டிவிக்கும் தீட்சிதர்கள், சோழர்கள்ளாதவர்களுக்கு மணிமுடி சூட்டமாட்டோம் என்று சேரனிடம் தஞ்சம் புகுந்தனர்.
அவரோ நடராசரிடம், “சோழ மணிமுடியைத் தீட்சிதர்கள் கொள்கை மீறி நான் சூடப்போவதில்லை. ஆனால், ஆட்சி செய்ய ஒரு மணிமுடியை நீயே அருள்வாய்” என வேண்ட, நடராசரோ உலக மன்னர்களுக்கு மட்டுமல்ல பிரம்மன், திருமாலுக்கும் காணக் கிடைக்காத தனது திருவடிகளை அவர் தலைமேல் வைத்து மணிமுடியாகச் சூட்டினார்.
“ ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்”
என்ற சுந்தரரின் வரிகளுக்குரியவர் கூற்றுவ நாயனார்.
“அற்றை நாளில் இரவின் கண்
அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர் பாதம்
பெறவே வேண்டும் எனப் பரவும்
பற்று விடாது துயில்வோர்க்குக் கனவில்
பாத மலர் அளிக்க
உற்ற அருளால் அவை தாங்கி
உலகம் எல்லாம் தனிப் புரந்தார்”
முடிவுரை
நெற்களஞ்சியத்தை அடியாருக்காகத் திறந்த இடங்கழியரும், கள்வனும் அடியார் வேடம் தரித்தால் திருந்தியவன் ஆவான் என்ற நரசிங்க முனையரையரும், அடியார் வேடத்தில் மெய்ப்பொருள் கண்ட மெய்ப்பொருளாரும், ஆலயங்கள் பல சென்று ஆண்டவனைப் பாடிய காடவர் கோனும், சிவனார் பாதத்தை மணிமுடியாகச் சூடிய கூற்றுவ நாயனார் மூலம் நமக்குக் குறுநில மன்னர்களின் பக்தி சிறப்பு காணக்கிடைக்கிறது.
மேற்கோள்கள்
1) பெரியபுராணம் -
2) திருத்தொண்டத் தொகை : https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/sundarar-thevaram-thiruththondaththogai-thillaivaal-anthanartham/#gsc.tab=0