உரையாசிரியர்கள் திறனாய்வாளர்களாக செயல்பட்ட இடங்கள் பற்றிய கட்டுரை
1. அறிமுகம்
6.1 நிலவியல்
6.2 வாழ்வியல்
6.3 உயிரியல்
6.4 பயிரியல்
6.5 தாவரவியல்
6.6 பண்பாடு
9. முடிவுரை
10.மேற்கோள்கள்
அறிமுகம்
மனித நாகரிகம் வளர்ச்சி அடைய, மொழியும் வளரும். ஒரு மூல நூலின் மொழி சிறிது காலத்திலேயே இரும்பு கடலையாகிவிடும். இதைத் தவிர்க்க அந்தந்த காலத்திற்கு ஏற்ற உரையாசிரியர்கள், மூல நூலுக்கு விளக்கங்களை தங்கள் கால மொழியில் எழுதினர்.
மேலை நாட்டு இலக்கிய சாயம் ஒட்டிக்கொண்டதுமுதல், திறனாய்வு களம் அறிமுகமாகி விரிந்தது. மதிப்பீடு, விளக்கம் என இவற்றில் நூலிற்கு விளக்கம் கூறி வைப்பதே திறனாய்வாளன் வேலை என முடிவுக்கு வந்தனர் அறிஞர்கள். உரையாசிரியர்களும் இதைத் தான் செய்கின்றனர்.
எனினும் உரையாசிரியர் இலக்கியத்தில் திறனாயும் பணி என்ன? இரண்டும் விளக்கம் கொடுப்பவை என்றால் எது இவை இரண்டையும் தனிப் பிரிவுகளாகப் பிரித்தது என்பதை இங்கு ஆராய்ந்து பார்க்கலாம்.
உரையாசிரியர் யார்?
தமிழ்நாட்டில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான இடைக்காலம், உரையாசிரியர்கள் தோன்றிய காலமெனக் கூறுவர். இதை “தமிழ் மீட்சி இயக்கம்” எனவும் தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை அழைத்தார்.
தன் அனுபவத்தை இலக்கிய வடிவில் எழுதி வைத்த புலவர்களின் இலக்கிய சுவை மற்றும் நயத்தை, அனைவருக்கும் தெருமுனையில் நின்று தெரிவிக்கும் திருப்பணியே இவர்களது பணி.
பிற்காலத்தில் உரைநூல்களுக்கு இவர்களின் பெயர்களையே சூட்டுமளவு தமிழ் வரலாற்றில் தனித்தடம் செய்தவர்கள் உரையாசிரியர்கள். சில உதாரணங்கள் பின்வருமாறு (மு.வை.அரவிந்தன்),
இளம்பூரணர் உரை – இளம்பூரணம்
நச்சினார்க்கினியர் உரை – நச்சினார்க்கினியம்
சேனாவரையார் உரை. – சேனாவரையம்
பேராசிரியர் உரை. – பேராசிரியரியம்
திறனாய்வாளர் பணியும் பண்பும்
- ஆய்வு நூலை ஊடுருவி
நோக்குதல் . - பொருளைத் தெளிவாக விளக்குவது.
- நிலையான, நிலையற்ற
கூறுகளைப் பாகுபடுத்துதல். - இலக்கிய விதிகளைத் தெளிவு படுத்துதல்.
- இலக்கியத்தின் மறைபொருளையும் விளக்கவேண்டும்.
என்பனவற்றை திறனாய்வாளர் பணியெனக் கொள்ளலாம் (தா.ஏ.ஞானமூர்த்தி). பல்கலைப் புலமையும், ஆய்வுப் பசியும், நுணுகி ஆராயும் அறிவும், எளிமையான எமுத்து ஆளுமையும் இதற்கு அவசியமான பண்புகள் ஆகும்.
முக்கியமாக இவர்களால் இலக்கிய அல்லது இலக்கணக் கொள்கை மற்றும் கோட்பாடுகள் வெளிவரவேண்டும். இவைகளை அடிப்படைப் பண்பாக எடுத்துக்கொண்டு, எந்த அளவிற்கு உரையாசிரியர்களுடன் பொருந்தியுள்ளது என்பதைக் காணலாம்.
ஆய்வு நூலை ஊடுருவி நோக்குதல்
இலக்கியங்கள் மற்றும் இலக்கணங்கள் எப்போதும் வெளிப்படையானவை அல்ல. ஏதேனும் உட்கருத்தைக் கொண்டே தொடுக்கப்படுகிறது. அவைகளைப் படிக்கும் எல்லா சுவைஞனும் சாரம் பெறுகிறானா என்பது தெளிவில்லாத விஷயம்.
‘எல் ’ என்னும் சொல்லைத் தொல்காப்பியர் இடையியலில் வைக்கிறார்.
“நூற்பா. : "எல்லே இயக்கம்"- தொல்.சொ.269
உரை. : எல் என்பது உரிச்சொல். நீர்மைத்து ஆயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையின் , இடைச்சொல் என்று கோடும்”
என்ற நூற்பா உரையில் மொழியாழம் தெரிந்ததாலேயே ஒரு சொல்லில் இலக்கணத் தன்மையைச் சுட்ட முடிந்தது. மேலும், உச்சிமேற்புலவரான நச்சினார்க்கினியரோ ஆராயுந் திறனில் கைதேர்ந்தவர்.
எல்லோரும் கபிவரை தொண்ணூற்றோன்பது (99) பூக்களைப் பற்றி எவ்வளவு அழகாக ஒரே பாடலில் பாடிவிட்டாரே! என்னே அவர் புலமை! எனப் பாராட்டிக் கொண்டிருக்கும் போது, முக்கண்ணன் பாடலில் குற்றம் கண்ட நக்கீரரைப் போல் இவர் கிளம்பிவிட்டார்.
“குறிஞ்சிப் பாட்டு: இரும் புன்னை, நரந்தம், நாகம்
நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும்
வேங்கையும், பிறவும் , அரக்கு
நச்சினார்க்கினியர்: கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியில் வரைவு இன்றிப் பூ
மயங்கியவாறு காண்க”
என்கிறார். தோழி மார் ஒரே நேரத்தில் பறித்து விளையாடிய பூக்கள் யாவும் ஒரே நேரத்திலோ, ஒரே பொழுதிலோ, ஒரே நிலத்திலோ பூப்பவை அல்ல என்பதை நச்சினார்க்கினியர், ’பூ மயங்கியவாறு’ என்றே கூறுகிறார். வெறும் ஏட்டறிவு மட்டும் உரையாசிரியருக்குப் போதுமானது அல்ல என்பது இதன்பாற் புலப்படும்.
பொருளைத் தெளிவாக விளக்குவது
உரையாசிரியரின் அடிப்படை வேலை பொருள் தெளிவு படுத்துதல். அதை நுணுகி ஆராய்ந்து பார்ப்பது கடமை. இவர்கள் எவ்வளவு தெளிவான உரை தருகிறார்களோ அவ்வளவு தூரம் அந்த மூலநூல் காலப்பயணம் செய்யும்.
சில நேரங்களில், ஆராய்ச்சி செய்யும் உலகிற்கு இவைகள் ஒளிவிளக்காகவும் உள்ளன. இளம்பூரணர், களவியலில் அம்பலுக்கும் அலருக்கும் சொற்பொருள் விளக்கம் தருகிறார்.
“அம்பல் என்பது முகிழ்த்தல், அஃது ஒருவர் முகக்குறிப்பால் தோற்றுவித்தல்.
அலராவது சொல்லுதல்”
என்ற இந்த உரையே பிற்காலத்தில் தெளிவு பிறக்கக் காரணமானது. பேராசிரியரோ அழகு என்று பெரும்பாலான மக்கள் பொருள் கூறும் சொல்லான வனப்பு என்னும் சொல்லிற்கு,
“பெரும்பான்மையும் பல உறுப்புத் திரண்ட வழகப் பெறுவதோர் அழகு”
என உறுப்புத்திரட்சி பற்றிக் கூறுகிறார். நச்சினார்க்கினியர், “ அம்மி மிதந்து சுரை வீழ்ந்தது” என்பதற்கு,
“ஆழ்தற்குரிய அம்மி மிதந்து மிதத்தற்குரிய சுரை ஆழ்ந்து வீழ்ந்து என்றது,
உயர்ந்தோர் வாழாதே தாழ்ந்தோர் வாழ்ந்ததனை”
எனப் பொருள் கூறுவது யாரும் எதிர்பாராத, ஆனால் எல்லாருக்கும் தெரிவிக்கவேண்டிய உரையாக அமைகிறது.
நிலையான,நிலையற்ற கூறுகளைப் பாகுபடுத்துதல்
இலக்கியங்கள் வாழ்வியல், பண்பாடு, நாகரிகம், அறிவியல், பக்தி எனப் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. அதனையும் பகுப்பாய்வு செய்து பல உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர்.
உரை எழுத வந்த இடத்தில் வெறும் உரைகளோடு நின்றுவிடாமல், தமிழிற்கு இன்னும் செய்யும் கடமைகள் மீதம் உள்ளன என உணர்ந்தனர் போலும்!நச்சினார்க்கினியர் இலக்கியப் பொருண்மைகளைப் பகுப்பாய்வு செய்து அத்தினைக்குமான அர்த்தங்களையும் நம்மிடம் கூறிச் செல்கிறார்.
நிலவியல்
சங்க இலக்கியங்களில் கூறப்படும் ஊரும் பேரும் பற்றிய தகவல்களை இவர் நன்கு அறிந்துவைத்துள்ளார். 'காழகம்' என்பது 'கடாரம்', 'ஏரகம்' என்பது 'மலைநாட்டது திருப்பதி' என்றும், மதிலோடு பெரிய பட்டினத்தை 'எயிற்பட்டினம்' எனக்கூறி ஊர்களின் விபரங்களை அறியத் துணை செய்கிறார்.
வாழ்வியல்
ஒவ்வோர் பத்துப்பாட்டு வரிகளும் பல கூறுகளைக் கொண்டது. அது தமிழரின் வாழ்வியலை ஆவணப்படுத்தி வைத்திருக்கும் தமிழினக் களஞ்சியம். உழவு முதல், தட்டை என்னும் தினைப்புனம் காக்கும் கருவி வரை அவர் அகக் கண்களில் அகப்படாத விஷயம் இல்லை.
இடையர்களின் உடையும் பழக்கவழக்கமும் பற்றிக் கூறியுள்ளார். எளியமக்களின் புலால் உணவு வகைகளையும் அறிந்து கூறியுள்ளார்.
உயிரியல்
யானைகளின் விருப்ப உணவான அதிமதுர தழை பற்றிக் கூறுகிறார். குதிரைக்கான அணிகளின் வகைகளும் அவைகள் அணியப்படவேண்டிய இடங்களையும் சுட்டுகிறார்.
அன்னப் பறவைகளில் வெள்ளை இனமும் உண்டு என்றும் அவைத் தாவிப் பறக்கும் எனவும் கூறுகிறார். பாம்புகள் மாணிக்கம் உமிழும் கதையை இவரும் கூறுகிறார்.
பயிரியல்
தமிழகத்தின் பயிர் வகைகள் பற்றிய விபரங்கள் இவரின் விரல் நுனியில் இருந்துள்ளது. நறைக்காயை “ நறுநாற்றத்தை உடைய காய். அது சாதிக்காய்” என்று கூறுகிறார். தேங்காய் பழுத்தால் அதன் அடிப்பகுதி மூன்றாகப் புடைத்து இருக்கும் என்றும் கூறுகிறார்.
தாவரவியல்
முன்பு கூறியதைப் போல் எந்த நிலத்தில், எந்த பெரும்பொழுதில் எந்த சிறுபொழுதில் எந்த மலர்கள் பூக்கும் எனத் தெரிந்து வைத்திருப்பவர் நச்சினார்க்கினியர்.
சங்க இலக்கியப் பூவின் பெயர், அவர் காலத்தில் எப்படி வழங்கப்படுகிறது என்பதைத் தெளிவாக தம் உரையில் எழுதிவைத்துள்ளார் நச்சினார்க்கினியர். இதனால் தான் பல சங்க காலத்து மலர்கள் தற்காலத்திலும் பூக்கின்றன.
தாழையைத் தெங்கின் பாளை என்றும், கைதை என்பதற்குத் தாழம்பூ எனத் தற்கால வழக்குச் சொல்லைச் சொல்லி நமக்குத் தெளிவு தருகிறார்.
பண்பாடு
இவரின் உரைகளின் மூலம் இவர் காலப் பண்பாடு புலனாகிறது. ஆண் , பெண் என இருபாலரும் தங்கள் உடைகளைப் புடவை என்று குறிப்பிட்டனர். அமாவாசை உண்ணா நோன்புகள் , கார்த்திகை நாட்களில் விளக்கேற்றுவது, வழுதுணங்காய் மற்றும் முந்திரிப்பழமும் பயிரானது, ஊறுகாய் பயன்பாடு, கடல் வணிகர்கள் செட்டிகள் என அழைக்கப்பட்டது என பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை இவர் சுட்டுகிறார்.
இலக்கிய விதிகளைத் தெளிவு படுத்துதல்
விதிகள் இல்லாமல் இலக்கியம் இல்லை. இலக்கணமும் இல்லை. மொழிக்கு ஏதேனும் விதிகளை வகுத்துக் கொண்டுதான் இருக்கின்றன இவை இரண்டும். அவைகளைப் பொருள் தெளிவு படுத்தித் தருவதோடு மட்டுமல்லாமல் அவைகளின் விதி, கொள்கைகளை ஆராய்ந்து தெரிவிப்பதும் திறனாய்வாளர் பணியாகிறது.
தமிழ் இலக்கணக் கோட்பாடுகளைப் பொறுத்தவரை உரையாசிரியர்களின் உரைகளால் தான் தெளிவான முடிவை எடுக்க முடிகிறது. பலவாறு இலக்கணக் கோட்பாடுகளையும், இலக்கிய கோட்பாடுகளையும் அறிந்திருந்த இளம்பூரணனார் , மிக எளிமையான முறையில் தனக்குப் புலப்பட்ட இலக்கண கோட்பாட்டை ஆராய்ந்து தமது உரைகளில் எழுதியுள்ளார். செ.வை.சண்முகம் அவர்கள் தனது எழுத்திலக்கணக் கோட்பாடு மூலம் கூறுவதைக் காணலாம்.
“இளம்பூரணர் உரைப்படிக் குற்றியலுகரச் சொல் தனிச்சொல்லாக அல்லது கிளவியின் இறுதியில் வரும்போது குற்றியலுகரமாக உச்சரிக்கப்படுகிறது; அதுவே நிலை மொழியில் இருந்து இன்னொரு சொல்லோடு புணர்ந்தால், முற்றியலுகரமாக மாறிவிடுகிறது “
நச்சினார்க்கினியர், தனது கலித்தொகை உரையில் அகத்திணைக் கோட்பாடுகளை ஆராய்ந்து விளக்கம் தருகிறார். யாப்பருங்கல விருத்தியுரையில் , குணசாகரர் ஆனந்தக் குற்றங்களை ஆராய்கிறார். வீரசோழிய இலக்கண உரையாசிரியராகிய பெருந்தேவனாரோ, மகரக்குறுக்க கோட்பாட்டை ஆராய்ந்து கூறுகிறார்.
“ நூற்பா: "உட்பெறு புள்ளி உருவாகுமே"
உரை : வருமொழி முதல் கவரம் வந்து புணர்ந்தால் அந்த
மகரமானது குறுகி, கால் மாத்திரையாய் – உட் புள்ளி பெறும் “
என விளக்கம் தருகிறார். ஒவ்வொரு உரையாசிரியரும் தமது உரைநூலில் கொள்கை, கோட்பாடுகளை விளக்காமல் இல்லை. மூல நூலிற்கு உரை எழுதுவது வெறும் உரையாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்தே உரைகளை எழுதியுள்ளது தெரிகிறது.
இலக்கியத்தின் மறைபொருளையும் விளக்கவேண்டும்
இலக்கியங்கள் நேரடியானவை அல்ல. வாசகனைத் தேட வைக்கும். எல்லாமே வெளிப்படையாக இருந்தால், அது இலக்கியச்சுவை தரச் சிரமப்படும். இதற்கெனவே பல்வேறு உத்திகளைக் கொண்டே புலவர்கள் பாடல்களை இயற்றி வைப்பர்.
பல்வேறு திரைகளைக் கொண்டு மூடப்பட்டிருக்கும் இலக்கியச்சுவையை வெளிக்கொணரவும் செய்தனர், உரை வழங்கிய பெரியோர். நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர்.
திருத்தக்கதேவர் சச்சந்த மன்னனை, ‘களிறு அந்நாண்’ என்கிறார். மன்னனைக் கூறுவதால் வலிமை கூறப்பட்டிருக்கலாம் என நினைப்பவர் உண்டு. நச்சினார்க்கினியரோ,
“மதச் செருக்கால், பாகன் தோட்டியை நீவுமாறு போலக் காமக்களிப்பால் , தன் அமைச்சர் கூற்றைக் கடத்தல் நோக்கி, ‘களிறு ஆனான்’ என்றார்”
என விளக்கம் தருவது, கதைக்கேற்பப் பொருள் கோர்க்கும் திறனும் ஒரு உரையாசிரியனுக்குத் தேவை என்பதைக் காட்டுகிறது.
பொதுவாகக் கூற்று என்றால் யமன் என்று பொருள். திருக்குறளுக்கு உரை வழங்கிய பரிதியாரோ, “தன்னுயிரை ஒருவருக்கும் கொட்டாத கூற்றுவன்” என விளக்கம் கூறுகிறார். மறைபொருள் என்றால் மறைந்திருக்கும் குற்றத்தை வெளிப்படுத்திக் கடிந்துகொள்வதும் தான். குற்றங்களாதலில் கைதேர்ந்தவரான சிவஞான முனிவர், "கம்பராமாயண முதற் செய்யுள் சங்கோத்தர விருத்தி" என்னும் ஒருநூலையே எழுதி முடிக்கிறார். அதில் கம்பராமாயணத்துச் செய்யுளான,
"நாடிய பொருள் கூடும்
ஞானமும் புகழும் உண்டாம்;
வேரியாங் கமலை நோக்கும்;
சூடிய சிலை இ ராமன்
தோள்வலி கூறுவோர்க்கே”
என்னும் ஒரு பாடலில் மட்டும் இருபத்தி இரண்டு குற்றம் கண்டுள்ளார். இதைப் பிற்கால இடைச்செருகல் எனவும் கூறுவர்.
முடிவுரை
இலக்கியங்களும் இலக்கணங்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம்முடன் பயணிக்கக் காரணம், படைப்பிற்கும் நமக்கும் இடையில் உழைத்த இடைத்தரகர்களான உரையாசிரியர்கள் தான்.
இருபதாம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் திறனாய்வுத்துறையை நமது உரையாசிரியர்கள் இயல்பாகவே, இடைக்காலத்தில் ஆராய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. திறனாய்வாளனின் அனைத்துப் பணிகளையும், அவர்கள் செய்துள்ளனர். எனவே, உரையாசிரியர்களும் திறனாய்வாளர்கள் தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
வெறும் உரையுடனை நின்றிருந்தால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டிருக்கமாட்டார்கள். உரைகளைத் தாண்டிய மொழித்தொண்டின் வாசனை உரைகளில் வீசத்தான் செய்கிறது.
மேற்கோள்கள்
1) உரையாசிரியர்கள் – மு.வை. அரவிந்தன், மணிவாசகர் பதிப்பகம்,
8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108
2) இலக்கியத் திறனாய்வியல் – தா.ஏ.ஞானமூர்த்தி
3)கம்பராமாயணம் - வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் , உமா பதிப்பகம், 171(4..18), பவளக்காரத்தெரு, மண்ணம், சென்னை-600 001.








