கண்டேன் என்று பாடி கண்கள் பூரித்துப் போன தமிழின் இடங்கள் பற்றிய கட்டுரை
1. அறிமுகம்
4. கம்பராமாயணம்
5. ஐயாறு பதிகம்
8. முடிவுரை
அறிமுகம்
மனித புலனறிவில் முதன்மையானது கண்கள்.அவை வியந்து போகும் தருணங்களில் நமது புலவர் பெருமக்கள் மிக அழகான பாடல்களையும் ,பாடல் வரிகளையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.இவை காலம் கடந்தும் அவர்கள் கண்ட காட்சியை நாமும் காண வகை செய்கிறன.அப்படியான 'கண்டேன்'என்னும் வார்த்தையைப் பாடிப் பகிர்ந்த தமிழ் செயல்களைப் பற்றி இங்குக் காணவிருக்கிறோம்.
மன எழுச்சிக்கான கொள்கை
மனிதன் மனம் படைத்தவன்.தொல்காப்பியரும், ‘ஆறறிவு உளவே அவற்றோடு மனனே ’ என்கிறார்( தொல்). பொதுவாகவே, எதைக் கண்டு மன எழுச்சி வருகிறது என்பதை நாம் அறிய வேண்டும்.
ஒரு விடயம், மறைபொருளாக இருக்கும் போது, அது உலகத்திற்கு ஒரு கட்டத்தில் தெரியவரும்போது, அதை மன எழுச்சியை உண்டாக்குவதாக, கீழகாணும் கொள்கை ஆராய்ச்சிக் கட்டுரை கூறும்.
மிகவும் எதிர்பார்த்த ஒன்று எதிர்பார்த்த படியே நடந்தாலோ, பல நாட்கள் தேடிய பொருளோ, வேறு ஏதோ கிடைக்கும் பட்சத்திலும் மன எழுச்சி அல்லது உற்சாகம் பிறக்கும். இவை மனித இயல்புகளாகும்.
ஆர்வத்துடன் செய்யும் வேலை வெற்றி அடைந்தாலும் உற்சாகம் வரும். சிலபேரின் சுறுசுறுப்பான முகமும் கூட உற்சாகத்தை உங்களுக்கு வரவழைத்திருக்கும்.
“Mathematically „excitement‟ is defined as “the interest generated in an activity”. An interesting Activity full of suspense will be more exciting than a one which lacks suspense. For example, a match played by Two strong teams will be more exciting when they have equal chances of winning as the outcome cannot be Easily proposed” - ( The excitement theory on human behaviour)
இதன் மூலம் ஒரு நிகழ்வு நடக்க அதிகம் வாய்ப்பு இருக்குமானால், அது உற்சாகத்தைத் தராது. ஒருவேளை, அந்நிகழ்வு நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என்றவாறு சரியான முடிவைக் கணிக்க முடியாத இடத்தில், அதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாகும். அதன் முடிவு தெரியும் போது மன எழுச்சி உண்டாகும். இதுவே சாரம்.
தமிழும் காணலும்
ஒரு விடயத்தைக் காண்பதன் உற்சாக நிகழ்வுகள் தமிழில் அதிகம் பயின்று வந்துள்ளது. அது தலைவன் தலைவி முதன்முதலில் கண்டு கொள்வதோ, காணாததைக் கண்டுகொள்வதோ எனப் பல நிகழ்வுகள் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ் கற்பிக்கும் அனைத்துக் காணலின் நிகழ்வுகளிலும் மன எழுச்சிகள்
ஆராவாரத்துடன் அமைகின்றன. கதாபாத்திரத்தின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும். இது இலக்கிய வெற்றியாகவும் பார்க்கலாம்.
கம்பராமாயணம்
இந்திய நாட்டின் இருபெரும் காப்பியத்தின் முதன்மைக் காப்பியமான ராமாயணத்தின் தழுவல் கம்பராமாயணம் என்று கூற மனம் விரும்பாத, எனினும் கூறியே ஆக வேண்டிய உண்மை. மூல நூலினின்றும் தழுவல் சிறக்க அமைந்துள்ளது. காரணம், நீங்கள் அறிந்தபடியே, கம்பன் என்னும் கருவிலே திருவுடையோன்.
இவரின் கவித்துவமான ஆளுமை மூல நூலை மிஞ்சிவிடுகிறது. எங்குத் தேடியும் காணாத சீதையை இலங்கையில் தேடப் போகிறான் அனுமன். எல்லா இடம் அலைந்த பின், எல்லோரின் குழைகளை உற்று நோக்கியபின், தான் தேடிவந்த தெய்வத்தை இறுதியாக அசோகவனத்தில் அழுதபடி பார்க்கிறான்.
இதை இராமனிடம் விவரிக்கும் போது, நெடுநாட்கள் சீதையைப் பற்றிச் சேதியறியாத இராமனை இந்த உரையாடலின் இறுதி வரையிலும் கூட காக்க வைக்க விரும்பாத அனுமன் உருவில் கம்பர், எடுத்த வார்த்தையிலேயே ஆனந்தத்தைப் பருகக் கொடுக்கிறார்.
“கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
அண்டர் நாயக !இனி, துறத்தி , ஐயமும்
பண்டு உள துயரும்’என்று, அனுமன் பன்னுவான் ”
‘ கண்டனென்’ என்ற வார்த்தை, நீண்ட நாட்களின் தேடற் பசி தீர, நினைவு
அழிந்து இருக்கும் இராமனின் மனதில் நிச்சயம் இன்ப இடி இறங்கியிருக்கும்.
ஐயாறு பதிகம்
தனது தவழும் வயதிலிருந்து சமணத்திற்கு மாறிய அப்பர் பெருமான், முதுமையில் அதே போல் தவழ்ந்தே சைவத்திற்குத் திரும்பினார். சைவத் தொண்டு செய்கிறார். என் கடன் பணி செய்து கிடப்பதே எனக் கூறிப் பணி செய்தபடியும் பதிகம் பாடியபடியும் இருந்தார்.
மற்ற அடியாரைப் போல் இவருக்கும் கயிலாயத்திற்குப் பயணப்பட விருப்பம். முதுகெலும்பு தன்னால் முடிந்த வரை வலைந்து இருந்தது. நிற்கவும் திடம் இல்லாத உடலை வைத்துக் கொண்டு கயிலாயம் செல்கிறார். தவழ்ந்தே செல்கிறார்.
கருணைக்கே களஞ்சியமான சிவபெருமானோ , அருகே உள்ள குளத்தில் மூழ்கி எழுக என அன்பு கட்டளையிட்டார். கயிலாயக் குளத்தில் மூழ்கி, திருவையாறு குளத்தில் எழுந்தார். அதிசயம் கண்டு வியக்கும் முன் மீண்டும் ஓர் அதிசயம் நிகழ்கிறது.
சிவபெருமான் காணக்கிடைக்காத காட்சி கொடுக்கிறார். பிரம்மன் அன்னமாகியும், திருமால் வராகமாகியும் காணக்கிடைக்காத அடியும் முடியும்
அவருக்குக் காணக்கிட்டியது. இதுவரை தோற்றம் பாடியவர், இதோ தோற்றம்
காணுகிறார்.
“ மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்”
கண்டேன் , கண்டேன் எனப் பதிகம் தோறும் பரவசத்துடன் சொல்கிறார்.
சாதாரணக் காட்சியா அவர் கண்டது. அழுத்தந் திருத்தமாகச் சொல்லி
“கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்”
பதிகம் நெடுங்கிலும் ‘கண்டறியாதன் கண்டேன் ‘ எனக்கூறி தான் கண்ட
காட்சியின் அருமை பாட்டையும் நம்மிடம் உணர்த்துகிறார்.
மூன்றாம் திருவந்தாதி
ஆழ்வார்கள் வைணவம் சார்ந்தவர்கள். அதில் மூவர் முதலிகள் உண்டு.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் எனப்படுவோர்கள் தான் அந்த மூவர் முதலிகள். இவர்கள் மூவரும் கூட இறைவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
மழை பெய்த வேலையில் ஒருவர் பின் ஒருவராக, ஓர் இடத்தில் தற்செயலாகக் கூடினர். அவ்விடத்தின் அளவானது, ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூலர் நிற்கலாம். அப்படி சரியாக அவர்கள் மூன்று பேரும் நிற்கும் போது மேலும் ஒருவர் அங்கு இருப்பதாகவும், இதனால் இடப்பற்றாக்குறை வந்து ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இருளில் ஒளியில்லாததால் யாரந்த நான்காவது நபர் என அறிய இயலவில்லை. அப்போது இறைவனிடம் ஒளி கேட்டு முதலிருவரும் ‘ வையந்தகழகயா ’ எனவும் ‘அன்பே தகழியா’ பாசுரம் பாடி ஞான விளக்கேற்ற மூன்றாவது நபரான பேயாழ்வார் நான்காவது நபரைக் கண்டு கொண்டார்.
இதுவரை யாரைப் பற்றிப் பேசிப் பூரித்தோமோ அவரே இங்கு நின்றுகொண்டு அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார் என அப்போது அவர்களுக்குப் புரிந்தது. அந்தத் திருவுருவத்தைக் கண்ட பேயாழ்வார் பின்வரும் பாசுரப் பாடலைப் பாடுகிறார்.
“ திருக்கண்டேன் ; பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
யாருக்கும் காணக்கிடைக்காத த செல்வம் கண்டேன். பொன்போன்ற மேனி
கண்டேன். அவனது சக்கரம், சங்கு காணப்பெற்றேன் எனத் தான் பார்த்ததை மன எழுச்சியில் ததும்பிப் பாடுகிறார்.
வாரணம் ஆயிரம்
மற்றவர்களோ இறைவனைக் காணதான் முடிந்தது. ஆண்டாள் என்னும் கோதைப் பெண்ணிற்கோ இறைவனுடன் கல்யாணமும் முடிந்தது. கண்ணன், கண்ணன் எனக் காலம் தோரும் அவனையே நினைத்த கோதை, நினைத்தபடியே பூஜைக்கான மாலை மட்டுமல்லாமல் மணமாலையும் மாற்றிக் கொண்டாள்.
“தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான் ”
“காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான் ”
“அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான் ”
“காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான் ”
“அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் ”
“கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான் ”
“தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான் ”
“அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான் ”
“பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான் ”
“மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான் ”
ஆண்டாள் தனது நெடுநாள் காதலனான கண்ணனை மணக்கப் போகிறார். அதற்காக ஆயிரம் யானைகள் சூழும்படி, கண்ணன் வந்து பெண் கேட்கிறான். விஷ்ணு சித்தரான பெரியாழ்வார் பொற்குடத்தில் ஆரத்தி எடுக்கிறார்.
மணநாள் குறிக்கப்படுகிறது. இந்திரன் முதலான தேவர்கள் திருமணத்திற்கு வருகை தந்து ஆண்டாளிற்கு பட்டாடை கொடுக்கின்றனர். காப்பு நாண் கட்டப்படுகிறது. மத்தளம், சங்கம் அவையவைகளின் கடமைகளைச் செய்கின்றன.
கண்ணன் வந்து ஆண்டாளின் கையைப் பற்றுகிறான். மறையோது தீவலம் வந்தனர். ஆண்டாளின் பாதம் தொட்டு அம்மி மிதிக்க வைக்கிறான் கண்ணன். பொரி இடுகின்றனர். குங்குமம் இடுகிறான் கண்ணன். மங்கல வீதியில் வலம் வருவதுடன் திருமணம் முடிகிறது.
இப்படியொரு கனவு அரிதிலும் அரிதல்லவா? கண்ட காட்சி கனவுதான். ஆனாலும், நேரில் கண்டே மணந்து மனைவியான பூரிப்பைக் கொண்டுள்ளது ஆண்டாளின் திருமொழிப் பாசுரம்.
‘கனாக்கண்டேன் தோழீ ” என அவர் ஒவ்வொரு பாசுர இறுதியிலும் பாடும் போது அவரின் மன எழுச்சி வெளிப்படுவதோடு இல்லாமல், அவர் அந்தக் கனவைக் கனவு போன்ற சூழ்நிலையென உணராமலே உயிர்ப்புடன் இருந்துள்ளார் என்பதையும் நாம் அறிய முடிகிறது.
முடிவுரை
மேற்கோள்கள்
1) The Excitement theory on human behaviour - IOSR Journal of Mathematics
(IOSR-JM)
e-ISSN: 2278-5728, p-ISSN:2319-765X. Volume 10, Issue 3 Ver. III (May-Jun.
2014), PP 37-44
www.iosrjournals.org, www.iosrjournals.org 37 | Page